ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டுக்குப் போகவேண்டும் - தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வீட்டுக்குப் போகவேண்டும் - தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மக்களின் குரலுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மக்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் நேற்றைய தினம் (20) தேசிய எதிர்ப்பு தினத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.



இதன்படி 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள், பகுதி நிலை அரச நிறுவனங்கள் மற்றும் முறைசாரா பிரிவு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சேவையாளர்கள் தங்களது மதிய உணவு இடைவேளையின் போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது. அரச, பகுதியில் அரச மற்றும் முறைசாரா துறை ஊழியர்கள் பெருமளவானோர் இந்த போராட்டங்களில் பங்கேற்று இருந்தனர்.

கருப்பு ஆடை அணிந்து இருந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முதன்மையான கோரிக்கையானது, "மக்கள் கருத்துக்கு தலைவணங்கு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான வேலை செய்ய முடியாத அரசாங்கம் வீட்டுக்குப் போ" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களின் சம்பளம் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் இறுதியில் உரையாற்றிய தொழிற்சங்க தலைவர்கள், மக்கள் கருத்துக்கு செவிசாய்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும், புதிய அமைச்சரவையை நியமித்து மக்களின் போராட்டத்தை ஏமாற்ற முடியாது என்றும், ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் துப்பாக்கி மூலம் பொது மக்களின் போராட்டத்தை முடக்க நடவடிக்கை எடுக்கின்றது என்றும், அடக்குமுறை மூலம் இந்தப் போராட்டத்தை முடக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

அதேநேரம் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்தப் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வங்கி சேவை சங்கம், இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம், சுகாதார தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கம், இலங்கை கணக்காய்வு சேவை சங்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பெருமளவான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image