தோட்டத் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க கடுமையான தொழிற்சட்டங்கள்!

தோட்டத் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க கடுமையான தொழிற்சட்டங்கள்!

​தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கு கடுமையான தொழிற்சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தோட்டக் கம்பனிகளாலும் அவற்றின் உரிமையாளர்களாலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சுரண்டல்கள், அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

"எனவே, தோட்டத் தொழிலாளர்களின் உடல், சமூக மற்றும் உளவியல் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு மிகவும் உகந்த பணிச்சூழலை உருவாக்க புதிய தொழிலாளர் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்று அமைச்சர் கூறினார்.

தோட்டத் தொழிலாளர்கள் பணிபுரியும் சூழலில் அனுபவிக்கும் சுரண்டல்கள், அநீதிகள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பாக அவர்களிடமிருந்து வரும் முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பான விவரங்களை தனித்தனியாக சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். அதன்படி, தினக்கூலி ரூ.1,000 வழங்கப்படாமை, வேலை நாட்களின் அடிப்படையில் தினக்கூலி வழங்கப்படாமை, காரணமின்றி தினக்கூலியை குறைத்தல் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஒரு மாத காலத்திற்குள் தொழிலாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உலக சந்தையில் நிலவும் மின்வெட்டு, எரிபொருள் நெருக்கடி மற்றும் தேயிலை விலை குறைப்பு போன்ற காரணங்களால் பல சவால்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் தமது நிறுவனங்களை நடத்துவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், தொழிலாளர் சட்டங்களை மீறும் பல நிகழ்வுகள் பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளன என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர், மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக பொறுப்பான தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image