அதிபர் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை - ஜோசப் ஸ்டாலின்

அதிபர் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை - ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. ஆசிரியர்களுடைய சம்பளத்தில் இருந்த முரண்பாட்டை நீக்குவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சுகாதாரத்துறையினர் அவர்களுடைய சம்பளத்தை உயர்த்திக்கொள்வதற்காக போராடுகின்றனர். சுகாதாரத்துறையினர் அவர்களுடைய சம்பளத்தை அதிகரிக்க போராடவேண்டும். மருத்துவர்கள் அவர்களுடைய சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளவேண்டுமானால் அவர்கள் போராடுகிறார்கள். அதில் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர்கள் வெற்றியடைய நாம் வாழ்த்துகிறோம். அவர்கள் கூறுகிறார்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டமையினால் எமது சம்பளமும் அதிகரிக்கப்படவேண்டும் என்று. ஆனால் எமக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. சம்பள முரண்பாட்டை தீர்ப்பதே நடைபெற்றது. 1994ம் ஆண்டு ஆசிரியர் சேவை கிடைத்தது. 1996ம் ஆண்டு சம்பள முரண்பாடு ஏற்பட்டது. இதனால் 1997ம் ஆண்டு தொடக்கம் 25 வருடங்கள் அந்த போராட்டத்தை தீர்க்க போராடினோம். 2008ம் ஆண்டு அதிபர் ஆசிரியர் சேவையை வேறொரு சேவையில் கீழேடுத்து சம்பளம் அதிகரிப்பை வழங்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமமான சேவையில் முரண்பாடுகள் ஏற்பட்டமையினால்தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, கல்வியமைச்சு அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரிய ஆலோசகர் சேவை ஆகியவற்றை 2021ம் ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி தொடக்கம் மூடிய சேவையாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மூடிய சேவையாக மாற்றப்பட்டே சம்பள முரண்பாடு நீக்கப்பட்டுள்ளது. வேறொரு சேவையாக எடுக்கப்பட்ட சம்பள முரண்பாடு நீக்கப்பட்டுள்ளது. 1997ம் ஆண்டு தொடக்கம் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு சுபோதினி குழு அறிக்கையை வௌியிட்டுள்ளோம். அந்த அறிக்கையை பார்த்தாலும் முரண்பாட்டை நீக்குவதற்கு மூன்றில் ஒரு பகுதியே தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதில் சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்பதை விட சம்பள முரண்பாடு நீக்கப்பட்டது என்பதே உண்மை.நிதியமைச்சருடைய வரவுசெலவு உரையிலும் சம்பள முரண்பாட்டை நீக்குவதாகவே சுட்டிக்காட்டினார். எனவே இது குறித்து கதைக்கும் சம்பள முரண்பாடே நீக்கப்பட்டுள்ளது என்பதை அனைத்து தரப்பினருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தற்போது போராட்டதில் ஈடுபட்டுள்ள அனைவரும் உங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுங்கள். அந்த போராட்டத்தில் சில தகவல்கள் தவறாக கூறப்படுகின்றன. அதனால்தான் இதனை நாம் கூறுகிறோம். அவர்களுடன் எமக்கு எவ்வித கோபமும் இல்லை. வழங்கும் தகவல்கள் சரியானவையாக இருக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

ஆசிரியர், அதிபர்களுக்கு மேலதிக கொடுப்பனவு எதுவும் இல்லை. தேர்தல் பணி, பரீட்சை பணி என்பவற்றுக்கு சென்றால் மாத்திரமே கொடுப்பனவுகள் கிடைக்கும். இம்முறை எமது பரீட்சைப் பணிக்கான கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ​வேறாக போராட்டம் செய்யவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image