பேச்சுவாரத்தை தோல்வி - தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

பேச்சுவாரத்தை தோல்வி - தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளமையால்,  தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் சமிஞ்சை கட்டமைப்புகளை புனரமைக்காமை, சேதமடைந்த ரயில் பெட்டிகளை போக்குவரத்திற்கு பயன்படுத்தி பயணிகளை உயிராபத்துக்குட்படுத்துவதை எதிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 23 ஆம் திகதி தொடக்கம் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய பொதிகளைப் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டுக்களை விநியோகித்தல் முதலான செயற்பாடுகளில் இருந்து விலகி முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே பொதிகள் பொறுப்பேற்றல் மற்றும் பயணச்சீட்டு வழங்கல் போன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது. எது தொழிற்சங்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகம், பிரீமா விநியோகம், ஹொலிசிம் நிறுவனத்திற்கான சுண்ணாம்புத் திரவம் கொண்டு செல்லல் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆகிய சேவைகளில் இருந்தும் விலகிக் கொள்ளவுள்ளதாகவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கனிஷ்ட ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இதுவரை மிகவும் கஷ்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட தங்கும் விடுதி பராமரிப்பு மற்றும் ஓட்டுனர் கட்டுப்பாட்டு பொதிகள் சேவைகளில் இருந்தும் பணியாளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 ரயில் ஓய்வு அறைகள் மற்றும் ஓய்வு விடுதிகளுக்கான முன்பதிவும் இன்று முதல் நிறுத்தப்படும்.

பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்புக்கும், அரசுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்கும் ரயில்வே பொது முகாமையாளரே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரயில் நிலைய பொறுப்பதிகரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image