ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க மேலதிக நிதி

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டைத் தீர்க்க மேலதிக நிதி

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக நிதி உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் அறிக்கைக்கு அமைய, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ஆசிரிய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்வை வழங்குவதற்கு இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக 31 மில்லியன் ரூபாய் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதேபோன்று, உயர்தர பெறுபேறுகளுடன் தொடர்புடைய Z புள்ளி (Z score) தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்த அமைச்சர், ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு காணப்படும் நிலையில் க.பொ.த. (சாதாரண தர) பெறுபேறுகளை வெளியிடுவதில் இருந்த தடைகள் நீங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கொவிட் 19 தொற்று நோய் காரணமாக பிற்போடப்பட்ட க.பொ.த. (உயர் தர) பரீட்சை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைகளுக்கான தினங்கள் தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, 2022 ஜனவரி மாதத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையையும், பெப்ரவரி முதலாம் வாரத்தில் க.பொ.த. (உயர் தரம்) பரீட்சையையும், மே மாதம் 23 ஆம் திகதி க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையையும் நடத்துவதற்கு தற்பொழுது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், குழுவின் தலைவர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி சுசில் பிரேமஜயந்த, சீதா அரம்பெபோல, பியல் நிஷாந்த, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், டீ. கலையரசன், சுதத் மஞ்சுள, சாந்த பண்டார, எரான் விக்ரமரத்ன, பிரேம்நாத் சி. தொலவத்த, காதர் மஸ்தான், வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி, யதாமினி குணவர்தன, அனுப பஸ்குவல், சார்ள்ஸ் நிர்மலநாதன், நிமல் பியதிஸ்ஸ, சாமர சம்பத் தசநாயக்க, வீ. இராதாகிருஷ்ணன், உதயகாந்த குணதிலக, பேராசிரியர் சரித ஹேரத், மதுர விதானகே, மஞ்சுளா திசாநாயக்க, ரோஹன திசாநாயக்க, கோகிலா குணவர்தன ஆகியோரும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா உள்ளிட்ட உரிய நிறுவங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image