இலங்கையில் 'சுப்பர் டெல்டா' திரிபு உருவாகுவதாக சந்தேகம்

இலங்கையில் 'சுப்பர் டெல்டா' திரிபு உருவாகுவதாக சந்தேகம்

கொழும்பு நகரில் நூற்றுக்கு நூறு வீதம் பரவுவது டெல்டா திரிபாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேநேரம், நாட்டின் ஏனைய பாகங்களில் அல்பா திரிபை மீறி, டெல்டா திரிபு பரவுவதாகவும் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கப்பெற்ற மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 292 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் நீலிகா மளவிகே, கலாநிதி சந்திம ஜீவந்தர ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட பரிசோதனைகளில் இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அத்துடன், இலங்கையில் புதிதாக பரவிக்கொண்டிருப்பது சுப்பர் டெல்டா திரிபாக இருக்கக்கூடும் என்பதும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த பரிசோதனை அறிக்கை குறித்து எமது செய்திச் சேவை வினவியபோது பதிலளித்த கலாநிதி சந்திம ஜீவந்தர, நாட்டில் தடுப்பூசி ஏற்றம் நூற்றுக்கு 80 சதவீத இலக்கை அடைந்ததன் பின்னர், செப்டம்பர் இறுதிப் பகுதி அளவில் வைரஸ் பரவலில் ஓரளவு கட்டுப்பாட்டை எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன, கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா வைரஸ் பிறழ்வடைந்து மேலும் ஒரு திரிபு தற்போது கொழும்பில் பரவிக்கொண்டிருக்கின்றது.

இந்தத் திரிபு ஏனைய மாகாணங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிவரை நாட்டில் முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 7 ஆயிரத்து 500 உயிர்களைப் பாதுகாக்க முடியும்.

அத்துடன், ஒக்டோபர் 3 ஆம் திகதிவரை முடக்கநிலையை அமுலாக்கினால், மேலும் 10 ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என அந்த அறிக்கையினமூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போதை நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமா? என்பது மிகவும் சந்தேகமாக உள்ளது.

ஏனெனில், பெரும்பாலான இடங்களில் மக்கள் ஒன்றுகூடி இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், மிகவும் பொறுப்புடனான செயற்பாட்டின்மூலம் மாத்திரம தற்போதைய சந்தர்ப்பத்தில் இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.

இல்லாவிட்டால், நாட்டில் தொடர்ச்சியாக முடக்க நிலையை அமுலாக்குவதை தவிர்க்க முடியாது என விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image