ஆசிரியர் போட்டிப்பரீட்சை நடத்துவதில் ஏன் தாமதம்?

ஆசிரியர் போட்டிப்பரீட்சை நடத்துவதில் ஏன் தாமதம்?

கிழக்கு மற்றும் மேல் மாகாணசபைகளின் கீழியங்கும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கான நடவடிக்கைள் இதுவரை எடுக்கப்படவில்லை என்று ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் மத்திய நிலையம்.

விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் பரீட்சை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை . அத்துடன் தேசிய பாடசாலைகள், தெற்கு மற்றும் வட மத்திய மாகாணசபைகளின் கீழியங்கும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும் போட்டிப்பரீட்சைகள் நடத்துவதில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் அச்சங்கத்தின் அழைப்பாளர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் 19 தொற்று பரவல் காணப்பட்டிருந்த நிலையில் கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளின் கீழியங்குகின்ற பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகுதியானவர்களிடமிருந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இவ்விண்ணப்பங்களை அனுப்பும் நடவடிக்கைக்காக ஒவ்வொருவரும் தலா ஆயிரம் ரூபா அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு விரைவில் போட்டிப்பரீட்சை நடத்தி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு சாதாரண பட்டப்படிப்பை பூர்த்தி செய்த விசேட தேவையுடைவர்கள் தோற்ற முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், சாதாரண பட்டப்படிப்பை பூர்த்தி செய்த விசேட தேவையுடையவர்களும் விண்ணப்பிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பது அவசியம் என்றும் மகேஷ் அம்பேபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மத்திய மற்றும் தென் மாகாணசபைகளில் ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. அதில் விண்ணப்பிப்பதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 35 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சாதாரண முறையின் வயதெல்லை 40 ஆகும் தேசிய பாடசாலைகள், மேற்கு, கிழக்கு, மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான ஆகக்கூடிய வயதெல்லை 40 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதுடன் ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரி நிறைவுற்ற மாகாண சபைகளில் போட்டிப்பரீட்சைகளை நடத்தி முடிக்குமாறும் மாகாண ஆளுநர்கள், அரசாங்கத்திடம் மகேஷ் அம்பேபிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஏனைய மாகாணசபைகளின் கீழ் இயங்கும் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விரைவில் போட்டிப்பரீட்சை நடத்துமாறு கோருவதாகவும் தற்போதுள்ள நடைமுறைக்கமைய ஒவ்வொரு வருடமும் இவ்வாறு போட்டிப்பரீட்சை நடத்தியாகவேண்டும் என்றும் நடைமுறை சரியான முறையில் செயற்படுத்தாமையினால் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதெல்லையில் பிரச்சினை ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image