ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினை: சபையில் கல்வி அமைச்சர் நீண்ட விளக்கம்

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினை: சபையில் கல்வி அமைச்சர் நீண்ட விளக்கம்

ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நாடாளுமன்றில் நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளார்.


ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (04) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் பதிலளித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்களுக்கு சம்பள பிரச்சினை இருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றது. அவர்களுக்கு இதனை விடவும் அதிகமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். கொள்கை அடிப்படையில் நாங்கள் இதை நிச்சயமாக ஏற்றுக் கொள்கின்றோம். இதனை உரிய அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கின்றபோது சமாந்தரமான சேவைகளுக்கு நிச்சயமாக தாக்கம் இருக்கும். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்த்து அரச துறையில் உள்ள அனைத்து சேவை துறையினருக்கும் நியாயம் ஏற்படும் வகையில் முறைமை ஒன்றை தயாரிப்பது அரசாங்கத்தின் முதலாவது பொறுப்பாகும்.

இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு இருக்கும் முறைமைதான் வரவுசெலவுத்திட்டமாகும். தற்போது அந்தத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் இந்த சபையில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலமாகத்தான் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும். ஒரு தரப்பினரைப் பார்த்து மட்டுமல்லாது ஒட்டுமொத்த வியூகத்தை பார்த்து, நிலையான - நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு பொருத்தமான முறைமை வரவுசெலவுத்திட்டம் ஆகும்.

ஆசிரியர்கள் சம்பளம் 5 சதத்தினால்கூட குறைக்கப்படவில்லை. பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறவில்லை. ஆனால் அவ்வாறு இல்லாவிட்டாலும் ஆசிரியர்களின் சம்பளம் நூற்றுக்கு நூறு வீதம் எந்தவிதமான குறைப்பும் இன்றி அரசாங்கத்தினால் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது இலகுவான விடயமல்ல. அதனை செய்வதற்கான பணத்தை நாங்கள் தேடிக்கொண்டோம்.

இதனை செலுத்துவதற்கான அரசாங்கத்தின் பிரதான வருமான வழிமுறைகள் என்ன? வற் வரி பிரதானமாக வருமானம் வரும் வழி முறையாகும். தற்போது அது பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அடுத்ததாக சுங்கத்துறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுங்கத் துறையில் பெற்றுக்கொண்டு வருமானத்தை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கலால் வரி திணைக்களம் ஊடாக அரசாங்கத்திற்கு பெருமளவான வருமானம் கிடைக்கின்றது. ஆனால் தற்போது கொவிட் பரவல் காரணமாக இந்தத் துறைகள் அனைத்தும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இவை எப்படி நடந்தாலும் பரவாயில்லை. இந்த பணத்தை எங்கே தேடுவது? வரவு செலவு திட்டத்தை முன்வைப்பதற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன ஆனால் அந்த மூன்று மாதங்களும் பொறுத்திருக்க முடியாதாம். நாட்டுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. வருமானம் வழிமுறைகள் எப்படியாக வீழ்ச்சி அடைந்தாலும் பரவாயில்லை. உடனடியாக இதனை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர் இது நியாயமானதா? யாரை பழிவாங்குகிறார்கள்?

40 லட்சத்து 63 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் இது நியாயமானது என்று நினைப்பார்களா? நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை நாம் ஏற்படுத்தியதல்ல. முழு உலகத்திலும் இந்த கொவிட் பரவினால் ஏற்பட்டுள்ள நிலையாகும். இவ்வாறான நிலையில் மூன்று மாதங்கள் பொறுத்திருக்க முடியாது நாங்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தலில் ஈடுபட மாட்டோம் என்பது நியாயமானதா என்பதை எதிர்க்கட்சி தலைவர் ஒரு நிமிடம் சிந்தித்து பார்ப்பாரா?

இதனை எவ்வாறு தீர்ப்பது? அவசியமான நிதி எவ்வளவு என்பதை ஒரு அமைச்சினால் மாத்திரம் தனித்து தீர்மானிக்க முடியாது. சம்பளம் மற்றும் தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாட வேண்டும். திறைசேரியுடன் கலந்துரையாட வேண்டும். எமது அமைச்சுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக கிடைக்கவேண்டிய நிதி தொடர்பாக புதிய நிதி அமைச்சருடன் அடுத்த வாரம் நாங்கள் கலந்துரையாட இருக்கின்றோம். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி எவ்வளவு நிதி அவசியம் என்பது தீர்மானிக்கப்படும். கல்வி அமைச்சில் இருந்து கொண்டு அதனை தனித்து என்னால் தீர்மானிக்க முடியாது. அவ்வாறு தீர்மானிப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு செயன்முறை ரீதியான தீர்வு கிடைக்காது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image