ஹோட்டல் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம்

ஹோட்டல் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம்

கொவிட் பரவலினால் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் ஹோட்டல் துறையைச் சேர்ந்த சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுற்றுலாத்துறை ஹோட்டல் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை வலியுறுத்தி இன்று (23) முற்பகல் 10 மணியளவில் சுற்றுலாத்துறை அமைச்சின் முன்பாக ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையம் போராட்டம் நடத்த உள்ளது.

இந்தப் போராட்டம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையத்தின் பிரதிநிதி ஜயதிலக எமது இணையதளத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

கொவிட் பரவலானது சுற்றுலாத்துறை ஹோட்டல் துறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக ஹோட்டல் துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடனும், ஹோட்டல் துறையுடன் தொடர்புபட்டவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் அதற்கு தீர்வு காணப்படாதமை காரணமாக தற்போது அந்த பிரச்சனையானது எல்லை மீறிச் சென்றுள்ளது.

பிரெண்டிக்ஸ் கொத்தணி பரவல் ஏற்பட்டதுடன் இது தொடர்பில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டிருந்தால் இந்தத்துறை தற்போது இப்படியான நிலைமையில் இருக்காது. அரசாங்கம் கருத்திற்கொள்ளாதமை காரணமாக இந்த துறைக்கும், ஊழியர்களுக்கும் இப்படியான நிலைமையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் துறையில் நேரடியாக தொழிலில் ஈடுபடுபவர்களும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலில் ஈடுபடுபவர்கள், இந்தத் துறையின் ஊடாக வேறு தொழிலில் ஈடுபடுகின்றார்கள், அதாவது வாடகை வாகனங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள், தொல்பொருள் தளங்களில் ஈடுபடுகின்றார்கள் மற்றும் அந்த துறைசார் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் என பலதரப்பினரும் அடங்குகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நாங்கள் நேரடியாக பாதிப்பை எதிர்கொள்கின்ற தொழிலாளர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இவர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டதை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் துறையில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் சேவையில் ஈடுபடுகின்றனர். நிரந்தரமான தொழிலாளர்கள், நேரடி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் மறைமுக தொழிலாளர்கள் என அவர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தற்போதைய இந்த கொவிட் பரவல் சூழ்நிலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹோட்டல் துறையில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கு குறைந்த அளவான அடிப்படை சம்பளமே கிடைக்கின்றது. சுற்றுலாத்துறையில் ஹோட்டல்களுக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் மூலமாக கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில்தான் இவர்களுடைய சேவை கொடுப்பனவு (Services Charge) கிடைக்கும். இந்த சேவை கொடுப்பனவு தான் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமாக இருந்தது. இந்த நிலையில், சேவை கொடுப்பனவு இல்லாமல் போனால், மிகவும் குறைந்த அடிப்படை சம்பளத்தில் அவர்களால் வாழ முடியாது.

இதற்கு மேலதிகமாக, ஹோட்டல் துறை வீழ்ச்சி அடைந்துள்ளமையால் அதன் உரிமையாளர்களினால், அடிப்படை சம்பளத்திலும் கணிசமான அளவு குறைப்பதற்கு கோரப்படுகின்றது. இந்த நிலைமை இவ்வாறு தொடர்ந்தால் அடுத்த ஆண்டிலிருந்து சம்பளம் வழங்க முடியாது என்ற நிலைக்கு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்வதற்கு அல்லது தீர்வு ஒன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. சுற்றுலாத்துறை அமைச்சரோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, ஜனாதிபதியோ, பிரதமரோ இந்த விடயத்தில் உரிய பேச்சுவார்த்தையை இதுவரை மேற்கொள்ளவில்லை - என்று ஹோட்டல் ஊழியர்கள் மத்திய நிலையத்தின் பிரதிநிதி ஜயதிலக தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image