அரச ஊழியர்கள் தொடர்பான 2 சுற்றுநிருபங்கள் இன்று

அரச ஊழியர்கள் தொடர்பான 2 சுற்றுநிருபங்கள் இன்று

அரச சேவையுடன் தொடர்புடைய இரண்டு சுற்றறிக்கைகள் இன்று வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.

 
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கல் மற்றும் அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக செல்வதற்கான நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
 
 
தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகள் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், அந்நிலைமையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் தோன்றியுள்ளன. 
 
இந்நிலைமையில் வாரத்தில் கடமையாற்றும் ஒரு (01) நாள் அரச விடுமுறையை வழங்கி தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது.
 
நீர் வழங்கல், மின்சார விநியோகம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய  சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை எதிர்வரும் 03 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
அதேநேரம், கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 05 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது. 
 
ஆனாலும், குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில் கொள்ளாமை, சிரேட்டத்துவத்தைப் பாதிக்கின்றமை மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. 
 
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
இந்த நிலையில், குறித்த சுற்றறிக்கைகள் இன்றிரவு வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அமைச்சுக்களின் செயலாளர்களுடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image