ஆசிரியர் தொழிலின் அபிமானத்தை உயர்த்தி வைப்பதே எமது நோக்கம்

ஆசிரியர் தொழிலின் அபிமானத்தை உயர்த்தி வைப்பதே எமது நோக்கம்

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 

பல நாடுகளில் ஒக்டோபர் 5ம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டாலும் இலங்கையில் ஒக்டோபர் மாதம் 6ம் திகதியே ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.

‘கல்விக்கான புதிய சமூக ஒப்பந்தத்தை நோக்கி ஆசிரியர் குரல்களுக்கு மதிப்பளித்தல்’ எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து உலகளவில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதென யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்

அண்மைக் காலத்தில் அபிவிருத்தி கண்ட அனைத்து நாடுகளிலும் முக்கிய அங்கம் வகிப்பது கல்வியாகும்.
அதன்படி நாட்டை முன்னோக்கி கொண்டுச் சென்று மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான காரணி கல்வி என்பதை அரசாங்கம் அறிந்துகொண்டுள்ளது.

அதன் முன்னோடிப் பணியானது ஆசிரியர்களான உங்களையே சார்ந்திருக்கிறது.
உங்கள் பாடசாலைக்கு வரும் பிள்ளையை உலகத்தில் வலுவான அறிவுடன் போராடக்கூடியவர்களாக மாற்றும் இயலுமை உங்கள் வசமுள்ளது.

தொழிலாலும், சம்பளத்தினாலும் அளவிட முடியாத பெரும் அன்பு ஆசிரியர் தொழிலுடன் இணைந்துள்ளது. ஆசிரியத் தாய், ஆசிரியர் தந்தை என்று போற்றப்படுவதும் ஆசிரியர் தொழிலை மட்டுமேயாகும்.

ஆனால், ஆசிரியர்களுக்கும் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அந்த எதிர்பார்ப்புக்களை முடிந்த வரையில் மறுமலர்ச்சி பெறச் செய்து ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தப்படாமல், தாக்கப்படாமல் ஆசிரியர் தொழிலின் அபிமானத்தை உயர்த்தி வைப்பதே எமது நோக்கமாகும்.

வாழ்க்கைப் பயணத்தில் பிள்ளைகளின் அறிவு மேம்பாட்டிற்கு வழிகாட்ட தங்களை அர்ப்பணித்த ஆசிரிய தாய், தந்தையருக்கு உலக ஆசிரியர் தினம் உபகாரமாக அமையும் என்று நம்புகிறேன்! - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

2024 ஒக்டோபர் 5 அன்று அனுஷ்டிக்கப்படும் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, "Valuing teachers voices :towards a new social contracts for education " என்ற கருப்பொருளில் தெற்காசிய ஆசிரியர் அபிவிருத்தி மையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எதிர்கால உலகை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் இத்தகைய பணி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும்.

வளமான தேசம் மற்றும் அழகிய வாழ்க்கை என்ற எமது இந்தப் பயணத்தில் முன்னணிப் பங்கு வகிக்கின்றவர்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தனித்துவமானவர்கள். அவர்கள்தான் அந்த எதிர்கால உலகை உருவாக்குவதற்கான நேரடிப் பங்களிப்பை வழங்குகின்றார்கள்.

அறிவும், பண்பாடும், திறமையும் கொண்ட மாணவர் தலைமுறையை எதிர்காலத்திற்கு வழங்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்று நான் உணர்கிறேன். இலங்கை மாணவர் சமூகத்திற்கு கலாச்சாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் நிறைவேற்றும் பணிகள் தொடர்பில் உண்மையிலேயே திருப்திகரமான ஆசிரிய வகிபாகத்தின் தேவையை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

இதுவரையான பயணத்தைத் திரும்பிப் பார்க்கையில், சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ஆசிரியர்களும், அதிபர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் திருப்தியற்ற நிலைமைகளின் கீழ் பணியாற்றுகின்றமை நாம் அறியாததன்று. கல்வி அழுத்தம் மற்றும் வாழ்வாதாரத்திற்குப் போதுமான ஊதியம் கிடைக்காமல் ஆசிரியர்கள், அதிபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆசிரியர் சேவையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், திறமையான புதியவர்கள் ஆசிரிய சேவைக்கு உள்வரும் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்து வருகிறது. இத்தகைய வீழ்ச்சி நிலைமைகளால் பாதிக்கப்படுவது மாணவர்களும் ஒட்டுமொத்தக் கல்வி முறையுமே ஆகும்.

எனவே, திருப்தியான ஆசிரியரை உருவாக்குவது எங்கள் முன்னுரிமைப் பணியாகும். ஒரு நாளுக்கு என்று மட்டுப்படுத்தப்பட்ட இந்தக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், ஆசிரியருக்கு அளிக்க முடியுமான அதிகபட்ச கௌரவத்தினையும் பாராட்டினையும் வழங்கும் கல்வி முறையைக் கட்டியெழுப்பி, அறிவு, உளப்பாங்கு, திறமைகள் நிறைந்த ஆசிரியர்களை உருவாக்கி, ஆசிரியரின் வாழ்க்கைத் தரத்தை சமூகத்தில் உயர்த்துவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். எனவே, ஒரு நாடு என்ற ரீதியிலும், கல்வி அமைச்சர் என்ற ரீதியிலும், பிரதமர் என்ற ரீதியிலும், எமது ஆட்சிக் காலத்தில் அதனை மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவோம் என இலங்கை ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் நான் உறுதியளிப்பதுடன், இன்றைய தினம் உலக ஆசிரியர் தினத்தையும், ஒக்டோபர் ஆறாம் திகதி இலங்கையில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும், இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எமது அரசாங்கத்தின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image