தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பை நிராகரிக்க வேண்டும் - கலாநிதி அகிலன் கதிர்காமர்
"இலங்கையில் இருக்கின்ற அனைத்து பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் ஆசிரியர்கள் என எல்லோரும் உத்தேச தொழிலாளர் சட்ட மறுசீரமைப்பை எதிர்த்து போராடி, அதனை நிராகரிக்கின்ற ஒரு செயற்பாட்டில் உடனடியாக இறங்க வேண்டிய தேவை இருக்கின்றது.", என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், பொருளாதார நிபுணருமான கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.
தொழிலாளர் சட்ட மறுசீரமைப்புக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. இந்த உத்தேச சட்டவரைவு தொடர்பில் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க தரப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்காகவும் அதன் சாதக பாதக தன்மைகள் குறித்து விளக்கங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் வேலைத்தளம் இணையத்தளம் கலாநிதி அகிலன் கதிர்காமருடன் நடத்திய செவ்வி கீழே...
கேள்வி - அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச தொழிலாளர் சட்ட வரையில் எவ்வாறான மறுசீரமைப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன?
பதில் - இந்த மறுசீரமைப்புக்கான உத்தேச சட்ட வரைவு இன்னும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படவில்லை. சிங்கள மொழியில் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட ஊழியர்களுக்கான பாதுகாப்பை கொடுக்கும் அனைத்து சட்டங்களையும் ஒரு சட்டமாக அவசரமாக மாற்றியமைக்கும் இந்த செயல்பாடு பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இதற்கான காரணம் என்னவென்றால் தற்போது நாட்டின் சூழ்நிலையை பார்க்கும்போது ஒரு பக்கம் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் சுருங்கிக் கொண்டிருக்கின்றது. உலக வங்கியின் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது, முறைசார் துறையில் கடந்த ஆண்டில் 5 லட்சம் மக்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். கட்டிட நிர்மாணத்துறையை எடுத்துக் கொண்டால் பத்து லட்சம் மக்களின் வேலை இழக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இதுதான் பொருளாதார சூழல்.
அதேபோன்று அரசியல் சூழ்நிலை எடுத்து பார்ப்போமானால், இங்கு நியாயப்படுத்த முடியாத ஒரு பாராளுமன்றம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கின்றது. கடந்த ஆண்டு பாரிய போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஜனாதிபதி இந்த நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலை ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒரு நியாயமற்ற பாராளுமன்றத்தினால் தான் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆகவே பாராளுமன்ற நிலைமையை எடுத்து பார்க்கும்போது அவர்களுக்கு நியாயமான விதத்தில் சட்டங்களை மாற்றும் ஆணை இல்லை என்றே கூற வேண்டும்.
ஆகவே இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கும் போது எங்களுடைய கருத்து, 116 பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் என எல்லோரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றோம். இந்த காலப்பகுதியில் இவ்வாறான ஊழியர் சட்ட மறுசீரமைப்பை கொண்டுவரக் கூடாது என்பதே எங்களுடைய கருத்தாகும். முதலில் இங்கே ஒரு பொருளாதாரச் ஸதீரம் தேவைப்படுகின்றது. வேலைகளை இழந்த மக்களுக்கு போதிய அளவு மானியங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் ஒரு தேர்தலுக்குப் பின்னர் எல்லோராலும் அங்கீகரிக்க கூடிய பாராளுமன்றமே இவ்வாறான சட்டரீதியான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து கருத்தாக அமைகின்றது.
ஏனென்றால் அவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் இந்த சட்ட மாற்றங்களுடன் நீண்ட காலமாக எங்களுடைய தொழிலாளர்களுக்கு இருந்த பாதுகாப்புகள், அதாவது எட்டு மணித்தியால வேலை நேரம் இதனை மாற்ற யோசிக்கின்றார்கள். இதை மாற்றி அமைக்கும் போது சிலர் 12 மணித்தியாலம் 14 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும். அங்கு ஒரு விதமாக மேலதிக நேர கொடுப்பனவு இருக்காது.
பெண்களுக்கு பல பாதுகாப்புகள் ஏற்பாடுகள் இருக்கின்றன. எனினும், ஏற்கனவே ஆண் தொழிலாளர்கள் சுரண்டப்பட்டு இருக்கும் நிலைமையில், பெண்களுக்கு பாதுகாப்பை வழங்கி இது சமத்துவத்தை ஏற்படுத்தும் என்று சொல்லும் இந்த போலி கருத்தின் அடிப்படையில் பெண்களும் வேறு பல விதமாக சுரண்டப்படும் நிலையும் காணப்படலாம்.
கேள்வி - இலங்கையைப் பொருத்தமட்டில் சுமார் 30 முதல் 40 சதவீதமான தமிழ் தொழிலாளர்கள் இருக்கின்ற போதிலும், தமிழ் மொழியில் இந்த உத்தேச சட்ட வரவை வெளியிடவில்லை. அதே நேரத்தில் ஆங்கிலத்திலும் வெளியிடவில்லை. இதனை பார்க்கும்போது தமிழ் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஒரு முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை என்ற ஒரு சிந்தனை ஏற்படுகின்றது தானே?
பதில் - இது அரச கட்டமைப்பின் நீண்ட கால பிரச்சினையாக இருக்கின்றது. சட்டங்கள் கொள்கைகள் சம்பந்தமான விடயங்களை அவர்கள் நிச்சயமாக மூன்று மொழிகளிலும் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவராமல் அவசரப்பட்டு சிங்கள மொழியில் மட்டும் கொண்டு வந்திருப்பது கண்டிக்க வேண்டிய விடயமாக தான் நான் கருதுகின்றேன். இது எங்களுடைய இனப்பிரச்சினையோடும் சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கின்றது. அதுவும் மிக முக்கியமாக ஊழியர்களை பாதிக்கின்ற விடயத்தில் ஒரு விதமான விழிப்புணர்வும் இல்லாமல் இப்படியான சட்டங்களை முன்கொண்டு செல்வது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதேநேரம் இந்த சட்டங்கள் சிங்கள தொழிலாளர்களையும் பெருமளவு பாதிக்கப்போகின்றது. இது அடிப்படையில் அரசாங்கத்தின் ஜனநாயகத் தன்மை இன்மையை எடுத்துக்காட்டுகின்றது.
கேள்வி - நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் மூலம் ஒரு பணியிடத்தில் 7 தொழிலாளர்கள் இணைந்து ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கக்கூடிய ஏற்பாடு இருக்கின்றது ஆனால் புதிய சட்ட வரைவில் அந்த தொழிலாளர்களுடைய எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டு, 100 தொழிலாளர்கள் ஒன்றினையும்போது ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க முடியும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தொழிற்சங்கத்தின் செயல்பாடுகளை இல்லாமல் செய்வதற்கும் ஒரு நடவடிக்கையாக இது அமைந்து விடுமா?
பதில் - நிச்சயமாக இதனை தொழிற்சங்கங்கள் மீது ஒரு பாரிய தாக்குதலாகவே நான் பார்க்கின்றேன். ஏனென்றால் இறுதியில் தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாப்பது தொழிற்சங்கங்களாக இருக்கின்றன. நிறுவனங்கள் பலவிதமான அழுத்தங்களின் மூலம் மக்கள் ஏற்கனவே தொழிற்சங்கங்களில் இணைய முடியாத நிலைமை இருக்கின்றது. முறைசார் துறையை எடுத்துக் கொள்வோமானால் 10 வீதமான தொழிலாளர்கள் தான் தொழிற்சங்கத்தில் இணைந்திருக்கின்றார்கள்.
அதேநேரம், வேறு வேறு விடயங்களும் அதில் கூறப்பட்டிருக்கின்றன. அதாவது ஒரு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்தால் அங்கு ஒரு வாக்கெடுப்பு தேவை என்பது போன்ற பலவிதமான நிபந்தனைகளைக் கொண்டு வந்து முதலாளிகளை சார்ந்து ஒரு சட்ட மறுசீரமைப்பாக தான் இது இருக்கின்றது.
கேள்வி - சட்ட மறுசீரமைப்பில் தொழில் வழங்குநரும் தொழிலாளியும் ஒரு இணக்கப்பாட்டின் அடிப்படையில் நிபந்தனையை ஏற்படுத்திக் கொண்டு குறிப்பாக வேலை நேரம், வேலை நாட்கள், ஓய்வு பெறும் வயதில்லை என்பன குறித்து தீர்மானித்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. தொழில் வழங்குநர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு உடன்படிக்கைக்கு செல்லும் போது அங்கும் தொழில் வழங்குநர்களின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படாதா?
பதில் - இதுதான் முக்கியமான விடயம். ஏனென்றால் தொழில் வழங்கினரும் தொழிலாளியும் சமமான நிலையில் இல்லை. இங்கு ஒரு பாரிய அதிகார வேறுபாடு காணப்படுகின்றது. தொழில் வழங்குநரிடம் தான் அதிகாரம் இருக்கின்றது. அதற்காகத்தான் தொழிற்சங்கங்கள் 200 வருடங்களுக்கு முன்பு இருந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவே சர்வதேச வரலாறாகவும் இருக்கின்றது. ஆனால் அதனை விளங்காதவர்கள் போன்று அரசாங்கம் இவ்வாறான ஒரு கருத்தை முன் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது நிச்சயமாக தொழில் வழங்குநர் சார்பான ஒரு சட்ட மறுசீரமைப்பாக இருக்கின்றது. இதனால் தொழிலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படப் போகின்றது. தொழிலாளர்களை மேலும அதிகமாக சுரண்டுவதற்கான சட்டங்களாகவே இதனை நாங்கள் பார்க்க வேண்டி இருக்கின்றது.
கேள்வி - சட்ட வரைப்பு தொடர்பான யோசனைகள் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த காலப்பகுதி போதுமானதா? இந்த விடயத்தில் உங்களுடைய நடவடிக்கை எப்படியாக இருக்கப் போகின்றது?
பதில் - நிச்சயமாக 21 ஆம் திகதி வரையான கால அவகாசம் போதாது. இந்த மாற்று சட்டங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு மாதம் அல்ல ஒரு வருடம் இதை விவாதித்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நினைக்கின்றேன் இலங்கையில் இருக்கின்ற அனைத்து பொதுமக்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் ஆசிரியர்கள்ன எல்லோரும் சட்ட மறுசீரமைப்பை எதிர்த்து போராடி, அதனை நிராகரிக்கின்ற ஒரு செயற்பாட்டில் உடனடியாக இறங்க வேண்டிய தேவை இருக்கின்றது.
கேள்வி - அதற்கான ஆரம்பமாக நீங்கள் ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளீர்களா?
பதில் - இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றோம். இது போன்றதொரு கலந்துரையாடலில் கடந்த புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எங்களுடைய ஆசிரியர் சங்கமும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு பொதுக்கூட்டத்தை தயார்ப்படுத்தி இருந்தது. இவ்வாறான கருத்தரங்குகளும் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம், கடன் மறு சீரமைப்புக்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் முன் வைத்திருக்கின்றது. ஊழியர் சேமலாப நிதிமற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை பெரியளவு குறைக்கின்ற ஒரு செயற்பாட்டிலும் இறங்கி இருக்கின்றது. இவ்வாறாக தொழிலாளர்களை மீண்டும் மீண்டும் தாக்குகின்ற செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கின்றது. இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் எதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை தற்போது இருக்கின்றது.