மீண்டும் கூட்டு ஒப்பந்தம் - 1,500 ரூபா சம்பளத்திற்கு கம்பனிகள் இணக்கம்!

மீண்டும் கூட்டு ஒப்பந்தம் - 1,500 ரூபா சம்பளத்திற்கு கம்பனிகள் இணக்கம்!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பணவாக 150 ரூபா படி 1,500 ரூபா சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்தார். 

அத்துடன் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

30.07.2024 செவ்வாய்க்கிழமை பொகவந்தலாவை ரொப்கில் தோட்டபகுதியில் 12 வீடுகளும் டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 19 வீடுகளையும் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களான அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் சமூகத்திற்காக 80 வருடங்களுக்கு மேலாக உழைத்தவர்கள் லயன் குடியிருப்பில் இருந்து வந்தவர்கள்தான் செளமியமூர்த்தி தொண்டமானும் ஆறுமுகன் தொண்டமானும் பாராளுமன்றம் முதல் மாகாண சபை, பிரதேச சபை போன்றவற்றுக்கு அனுமதியை பெற்றுக்கொடுத்தார்கள்.

காங்கிரஸ் உரிமையை பெற்றுக்கொடுத்ததுடன் மாற்று கட்சியினருக்கு அது பிடிக்காமல் விமர்சனம் செய்வார்கள், மக்கள் சேவை செய்யும் போது பல எதிர்ப்புகள் வரும் அதனை உடைத்தெரிந்து முன் செல்ல வேண்டும். தொழிலாளி உழைத்தால் உழைப்புக்கேற்ற சம்பளத்தை பெறவேண்டும் தொழிற்சங்கங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரோடு கலந்துரையாட வேண்டும்.

அவ்வாறு கலந்துரையாடி உரிமைகளை பெற்று கொடுத்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பு மாத்திரமே. பத்தாயிரம் வீடமைப்பு திட்டத்தில் முதற்கட்டமாக 1,300 வீடுகளுக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 8,700 வீடுகளும் மலையக மக்களுக்கே அமைத்து கொடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் (28.07.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, சம்பள உரிமை, வீட்டு உரிமை என்பன இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன், ஹட்டனில் உள்ள சில கடைகளிலும், முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,700 சம்பளம் நீதிமன்ற தலையீட்டால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரூ. 1,700 சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் ரூ. 5,000+ அரசாங்கம் வழங்க வேண்டுமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது குறித்து இ.தொ.காவின் தலைவரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து இருந்த போதிலும். ஏனைய சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட ரூ. 5000 கொடுப்பனவு, அரச அதிகாரிகளால் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது.

அவர்கள் வேலைக்கு செல்வதாகவும், அவர்களுக்கான ஊழியர் சேமலாபநிதி வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அப்போதைய பிரதமரின் இணைப்பு செயலாளராக இருந்த செந்தில் தொண்டமான், இப்பிரச்சினை குறித்து அப்போதைய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ரூ. 5,000 வழங்குவதற்கான நியாயமான அரச ஆவணங்களை பிரதமரிடம் சமர்ப்பித்து, இந்த நிவாரண தொகையை பெருந்தோட்ட மக்களுக்கு வழங்க ஜனாதிபதியின் செயலாளர், திறைசேரி செயலாளர் ஆகியோருடன் பல முறை கலந்துரையாடி, செந்தில் தொண்டமான் மலையகம் முழுவதும் குறித்த தொகையை இடைக்கால நிவாரணமாக பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ரூ. 1,700 சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000+ ரூபாய் வழங்க மாவட்டம் வாரியாக தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கை என அனைத்து ஆவணங்களையும் செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் ரூ. 1,700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போது உள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்றுவழிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image