1,000 ரூபா வழங்கியதால் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு நட்டமில்லை

1,000 ரூபா வழங்கியதால் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு நட்டமில்லை

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பணிப்புரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாயை கடந்த காலங்களில் வழங்கியதால், அந்த கூட்டுத்தாபனத்துக்கு எந்தவிதமான நட்டங்களும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

2021ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமைய தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டிருந்ததால், அரச மற்றும் தனியார் துறைகளுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதன்படி, அரசுக்கு சொந்தமான அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனமும் தங்களது தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்கியிருந்தது.

ஒரு தொழிலாளிக்கு நாளாந்த நியதிச்சட்ட கொடுப்பனவுகளுடன் 1,150 ரூபாயை வழங்க வேண்டிய நிலை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டிருந்ததோடு, இதனால் கூட்டுத்தாபனத்தின் மொத்தச் செலவு 34.5 ஆக அதிகரித்ததிருந்ததாக பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் (SPC) வருடாந்த செயலாற்றுகை அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்குக் கிடைத்த இலாபத்திலிருந்து எந்தவிதமான சிரமங்களுமின்றி அதன் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட்சம்பளத்தை வழங்க முடிந்துள்ளது. திறைச்சேரியிடமிருந்து நிதியைப் பெற்று தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு கொரோனா வைரஸால் நாடு முடங்கியிருந்ததால் பயணக்கட்டுப்பாடுகள் நீடித்திருந்ததோடு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமையவே நாளாந்தச் தொழிற்செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டிருந்தது. இவ்வாறானப் பின்னணியிலும்கூட எந்தவிதமான நட்டமும் இல்லாது தங்களது தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தால் முடிந்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது பெருந்தோட்ட நிறுவனங்கள் குறிப்பாக அரசாங்கத்துக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், இதனால் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்கிற வாதமே பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.

எனினும், 2021ஆம் ஆண்டு அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் நாட்சம்பளத்தை எந்தவிதமான சிரமங்களுமின்றி கிடைக்கும் இலாபத்திலிருந்து வழங்கக்கூடிய இயலுமை இக்கூட்டுத்தாபனத்துக்குக் காணப்படுகிறது என்பதையே மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

2021ஆம் ஆண்டு மாத்திரம் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு வருமானமாக 93 கோடியே 71 இலட்சம் ரூபாய் (930,712,086) கிடைத்திருந்த நிலையில், இலாபம் மாத்திரம் 17 கோடியே 47 இலட்ச ரூபாய் (17,474,611) கிடைத்துள்ளது.

அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவத்தின் கீழ் 15 தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் 14 தோட்டங்கள் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் ஒரே ஒரு தோட்டம் மட்டும் காலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மூலம் - medialk.com/tamil

 பா.நிரோஸ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image