பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு தடையுத்தரவு பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு தடையுத்தரவு பிறப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான வர்த்தமானியை அமுல்படுத்தப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்காதிருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு நேற்று (03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இதனை தீர்மானித்துள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கனேபொல ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த 21ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவற்றதாக்கி, எழுத்தாணை கட்டளை பிறப்பிக்குமாறு கோரி 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தன.

பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமெஸ் டி சில்வா மற்றும் தொழில் அமைச்சர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை செயற்படுத்தினால் தற்போது நட்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் முழுமையாக செயலிழக்கும் நிலை உருவாகும் என மனுத்தாரர்கள் மன்றில் சுட்டிக்காட்டினர்.

பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடாமல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமையால் அதனை செல்லுபடியற்றதாக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.ஏ.ஜயசுந்தர, தொழில் அமைச்சின் செயலாளர் எச்.ஜி.டபிள்யூ.குணவர்தன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட 52 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image