பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் 15 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளமை, கல்விசாரா ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க S.பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் த.சிவரூபன் வௌியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 29.04.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் 02.05.2024 வியாழன் நண்பகலில் இருந்து அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காமையினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் 02.05.2024 வியாழன் நண்பகலில் இருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தினை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்கொள்ளவிருக்கின்றது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.
எனவே பாதுகாப்பு பணியாளர்கள் தவிர்ந்த அனைத்து அங்கத்தவர்களும் குறித்த காலப்பகுதியில் பணியிடங்களுக்குச் செல்லாது விடுவதுடன், 02.05.2024 நண்பகல் 12 மணிக்கு பணியிடங்களிலிருந்து கையொப்பமிட்டு வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு வேண்டப்படுவதோடு, 12 மணிக்கு நடைபெறும் விளக்கப்பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.
பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பயிலுநர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், மனிதவலு நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு வேண்டிநிற்கின்றோம். - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.