சர்வதேச ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம்

சர்வதேச ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம்

நவீன உலகில் மனித குலத்துக்கு அச்சம் விளைவிக்கும் ஒன்றாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது ஆட்கடத்தல். அண்மைய புள்ளிவிபரங்கள்படி உலகில் 5 கோடி மக்கள் மனித விற்பனைக்கு பலியாகியுள்ளதாக, புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர்களில் 54சதவீதமானோர் பெண்களும் சிறுமிகளும் ஆவர். பெண்களும் சிறுமிகளும் அதிகளவில் பாலியல் மற்றும் வீட்டு சேவகத்திற்காக மனித விற்பனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023ஆம் ஆண்டின் சர்வதேச ஆட்கடத்தல் எதிர்ப்பு தினத்தின் தொனிப்பொருள் 'ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் அடையுங்கள், யாரையும் விட்டுவிடாதீர்கள்' (Reach every victim of trafficking, leave no one behind) என்பதாகும்.

இலங்கையின் நிலை

இலங்கைப் பெண்கள் ஓமானுக்கு தொழில்வாய்ப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விற்பனை செய்யப்பட்;டமை தொடர்பில் அண்மையில் கண்டறியப்பட்ட விடயம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 12 பெண்கள் இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கி இருந்த நிலையில், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், ஓமானில் உள்ள இலங்கை தூதுரகத்தின் அதிகாரி ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆட்கடத்தல் தொடர்பான இலங்கை குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, ஆட்கடத்தல் வியாபாரத்தை ஒழிப்பதற்கான ஆகக்குறைந்த தராதரங்களை கூட இலங்கை அரசாங்கம் முழுமையாகப் பூர்த்திசெய்யாதபோதும், அவ்வாறு செய்வதற்கு குறிப்பிடத்தக்க முயற்;சிகளை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த அறிக்கைக்கான காலத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்தமான முயற்சிகள் அதிகரித்திருப்பதாக அரசாங்கம் நிரூபித்திருப்பதுடன், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் தாக்க்தைக் கருத்திற்கொண்டு ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு எதிரான திறனில் அடுக்கு 02 இற்கு இலங்கை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலின் சுயவிபரம்

கடந்த ஐந்து வருடங்களில் அறிக்கையிடப்பட்டவாறு, மனித ஆட்கடத்தல்காரர்கள் உள்ளுர் மற்றும் வெளிநாட்டவர்களை இலங்கையில் சுரண்டல்களுக்கு உள்ளாக்குவதுடன் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றவர்களை அங்கும் சுரண்டல்களுக்கு உள்ளாக்குகின்றனர்.
பெரும்பாலான இலங்கை ஆட்கடத்தல் வழக்குகள் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு பணியாளர்களாக அனுப்புவதாகக் காணப்படுகிறது. ஆட்கடத்தல் வியாபாரிகள் இலங்கையிலுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மத்திய கிழக்கு, ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கட்டுமான, ஆடை மற்றும் வீட்டு சேவைத் துறைகளில் கட்டாய உழைப்புக்களில் சுரண்டுகின்றனர்.

மத்திய கிழக்கில் ஏறத்தாழ 1.5 மில்லியன் இலங்கையர்கள் பணியாற்றுவதுடன், முக்கியமாக கட்டுமானத்துறை, வீட்டு வேலைகள் மற்றும் துறைசார் சேவைகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர். சவுதி அரேபியா, குவைத், கட்டார் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் பெரும்பாலான இலங்கைப் பணிப் பெண்கள் வேலைகளைத் தேடுவதுடன், இவர்களின் மத்தியிலேயே அதிகமான தொழில் தொடர்பான ஆட்கடத்தல் வியாபாரம் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஐந்து வருடங்களில் ஆயிரக்கணக்கான இலங்கை பெண் புலம்பெயர் பணியாளர்கள் - விசேடமாக நுவரெலியா,
அம்பாறை மற்றும் மட்டக்களப்பிலிருந்து சென்றவர்கள் – வளைகுடாவில் கட்டாய வீட்டுப் பணிகளில் தொழில் தருனர்களால் சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர்.

பாலியல் ரீதியான ஆட்கடத்தல் வியாபாரத்தில் இடம்பெறக்கூடிய பாலியல் சுரண்டல்களை முகவரமைப்புக்கள் மற்றும் தொழில்தருனர்கள் மூடிமறைப்பதற்கு இவ்வாறு செய்வதாக குறித்த ஊடக அறிக்கை தெரிவிக்கிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு கட்டத்தல்காரர்கள் இலங்கைப் பெண்களை வற்புறுததியுளளனர். அறிக்கைக்கான காலப்பகுதியில் உலகாளவிய பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்ய சமூக ஊடகங்களின் பயன்பாட்டை ஆட்கடத்தல் வியாபாரிகள் அதிகரித்தனர். மத்திய கிழக்கில் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்படும் நேபாள பெண்களுக்கு இலங்கை ஒரு பயணப் பாதையாக உள்ளது.

இலங்கைக்குள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை பலவந்தமான தொழில் மற்றும் பாலியல்சார் ஆட்கடத்தல் வியாபாரங்களுக்கு உள்ளாக்குகின்றனர் எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்கள், சிறுவர்கள், இனரீதியான சிறுபான்மையினர் மற்றும் முதியவர்கள் ஆபத்தில் உள்ளனர்.

முன்னுரிமையளிக்கப்பட்ட பரிந்துரைகள்

• வேலைக்கான ஆட்கடத்தல் வியாபாரிகள் உள்ளிட்ட ஆட்கடத்தல் வியாபாரக் காரர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரிகளுக்கு எதிராகத் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு,
தண்டனை வழங்குதல் மற்றும் கடத்தல்காரர்களுக்குப் போதுமான சிறைத் தண்டனையை வழங்குதல்.

* வெளிநாட்டில் ஆவணமற்றுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்ட ஆட்கடத்தல் வியாபாரிகளால் பாதிக்கப்படுபவர்களை முன்கூட்டியே அடையாளம் காணும் முயற்சிகளை அதிகரிக்கவும்.

* சட்ட அமுலாக்கல் மற்றும் நீதித்துறையின் பயிற்சிகளை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் கடத்தல்காரர்களின் கட்டாயத்தினால் பாதிக்கப்படுபவர்களால் இழைக்கப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு தண்டனை விதிக்கப்படாதிருப்பதை
உறுதிப்படுத்தல்.

* ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிரான வழக்குகளில் பங்குபற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு காலத்திற்கான போக்குவரத்து செலவு மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளை வழங்கி உதவி செய்தல். சிறுவர் பாலியல் ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டக்கோவையின் 360 , பிரிவைப் பயன்படுத்தல்.

* பாதுகாப்பான மற்றும் சட்டரீதியான புலம்பயெர்தலை ஊக்குவித்தல், புலம்பெயர்தல் தொடர்பான ஒழுங்குவிதிகள் பாலின ரீதியில் பாரபட்சம் காட்டப்படாது என்பதை உறுதிப்படுத்தல், பாதுகாப்பான
புலம்பெயர்தலை மேற்கொள்வதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் உள்ள வளங்கள் குறித்து புலம்பெயரும் பணியாளர்களுக்கு அறிவூட்டல்.

* ஆட்கடத்தல்களுக்கு எதிரான செயலணியின் ஊடாக, நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் ஒத்துழைப்பு முயற்சிகளை தொடர்ந்து வழங்குதல்.

வழக்குத் தொடர்தல்

ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு எதிரான சட்ட அமுலாக்கல் முயற்சிகளை அரசாங்கம் பேணி வருகிறது. குற்றவியல் சட்டக்கோவையின் 360, பிரிவானது பாலியல் ரீதியான ஆட்கடத்தல் மற்றும் தொழில்நோக்கத்திலான ஆட்கடத்தல் வியாபாரம் என்பவற்றை குற்றச்செயல்களாக வரையறுத்திருப்பதுடன், இதில் இவற்றுக்கு 20 வருட சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் என்பன பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை கடுமையாக இருப்பதுடன், பாலியல் ரீதியான ஆட்கடத்தல் வியாபாரத்தைப் பொறுத்த வரையில் பாலியல் வன்முறை போன்ற பிற கடுமையான குற்றச் செயல்களுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.

பாலியல் ரீதியான ஆட்கடத்தல் வியாபாரம் குறித்த குற்றச்சாட்டு ; தொடர்பில் விசாரிப்பதற்கும் தண்டனையைப் பெற்றுக் கொண்டுப்பதற்கும் குற்றவியல் சட்டக் கோவையின் வேறு பிரிவுகளையும் அரசாங்கம் பயன்படுத்தியது. 360 ஆ பிரிவானது சிறுவர்களைப் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கு உட்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளைக் குற்றமாகக் குறிப்பிட்டிருப்பதுடன், இதற்கு 20 வருட சிறைத்தண்டனை மற்றும் தண்டப்பணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 360 அ பிரிவானது கொள்முதல் குற்றங்களுக்கு மிகவும் குறைந்த தண்டனையாக 2 வருடங்கள் முதல் 10 வருட
சிறைத்தண்டனையும், தண்டப்பணத்தையும் பரிந்துரைக்கிறது.

தடுத்தல்

தடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் சிறிதளவு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் ஆட்கடத்தல் வியாபாரத்திற்கு எதிரான தேசிய செயலணியானது அடிக்கடி தொடர்ச்சியாகக் கூடுவதுடன், 2021-2025 தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பலவந்தமான தொழில் விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் முயற்சிக்காக 318 நிறுவனங்களில் தொழில் திணைக்களம் 64 அமுலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 2021ஆம் ஆண்டில் தொழில் திணைக்களம் 38,280 தொழில்சார் மேற்பார்வைகளை மேற்கொண்டிருப்பதுடன், சிறுவர் தொழிலாளர் குறித்து 204 முறைப்பாடுகளைப் பெற்றிருப்பதுடன், சிறுவர் தொழிலாளர் குறித்து 178 விசாரணைகளைப் பூர்த்தி செய்து, ஒரு வழக்கில் சிறுவர் தொழிலாளர் விதி மீறலுக்காகத் தண்டனை விதித்ததுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஆட்கடத்தல் தொடர்பான இலங்கை குறித்த அறிக்கையில் குறிபபிடப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்ட பிரிவு பணிப்பாளர் பிரதிகா சகலசூரிய, 2023 ஆம் ஆண்டின் சட்டவிரோத ஆட்கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,

சிறார்கள் ஆபத்தை எதிர்நோக்கும் நிலைமை அதிகம் என்பதால் ஆட்கடத்தில்காரர்களின் சூழ்ச்சியில் அவர்கள் இலகுவாக சிக்கிக்கொள்கின்றனர்.  சுற்றுலாத்துறையில் சிறுவர்  வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பொருளாதாரப் பாதிப்பு, குடும்ப உறவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, சிறார்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமை போன்ற காரணங்கள் சிறுவர்கள் ஆட்கடத்தலில் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறும் நிலையை அதிகரித்துள்ளது.

பெற்றோர்களிடமிருந்து உரிய ஆதரவு கிடைக்காமை, தாய் அல்லது தந்தை புலம்பெயர் தொழிலாளராக இருக்கின்றமை காரணமாக சிறார்களுக்கு போதிய ஆதரவும் அவதானமும் கிடைக்காமை அவர்களை ஆட்கடத்தல்காரர்களின் வலையில் இலகுவாக சிக்குவதற்கு காயணமாக உள்ளது.  இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள்  சிறுவர்களை நெருங்க பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர்.  

அவ்வாறானவர்கள் நெருங்கிய உறவினராக இருக்கலாம், நண்பராக இருக்கலாம், அயலவராக இருக்கலாம். இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.  குற்றவாளிகள் இணையதளங்களில் சஞ்சரிப்பதன் மூலமாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ள சிறார்களை அடையாளம் காண்பதற்காகவும், அவர்களை அதிலிருந்து மீட்பதற்காகவும் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காகவும் தலையீடு செய்கின்றது.  

ஆட்கடத்தலில் சிறுவர்கள் மேலும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக நடவடிக்கை எடுத்து இந்த குற்றத்தை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான காலம் இதுவாகும்.  எனவே ஆட்கடத்தல் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது குறித்து நீங்கள் அறிவிக்க முடியும்.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929  அல்லது சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் 0766 588 688  ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிய படுத்த முடியும். - என்றார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image